வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 65,524க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பியுள்ளனர் – அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

பின்னர் அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கடந்த இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த மே 30 முதல் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்தியஅரசு அறிவித்தது. மற்ற இடங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை அறவே நிறுத்தப்பட்டது. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன. இதைப்போல மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்வதற்காகவும் சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் பெரும்பாலான விமானங்கள், விமானநிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது விமானங்களில் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில் நான்காம் கட்ட ஊரடங்கின் போது கடந்த மே 25ம் தேதி முதல் உள்நாட்டு சிவில் விமான போக்குவரத்து உரிய அளவீட்டு முறையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

பிப்ரவரியில், ஊரடங்கு விதிக்கப்படாதபோது, இந்திய விமான நிலையங்கள் தினசரி 3,000 உள்நாட்டு விமானங்களை கையாண்டன. அதன் மூலம் தினமும் சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய விமான நிலையம் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 2,340 விமானங்களை இயக்கியுள்ளன. முதல் நாள் 428 விமானங்களும், செவ்வாயன்று 445, புதன்கிழமை 460, வியாழக்கிழமை 494 வெள்ளிக்கிழமை 513 மற்றும் சனிக்கிழமை 529 விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன.

நேற்று மட்டும் 683 விமானங்கள் மூலம் பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்று விமானப் போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளர். மேலும் மிஷன் வந்தே பாரத்தின் கீழ் 65,524 க்கும் மேற்பட்டோர் இப்போது இந்தியா திரும்பியுள்ளனர் என அதில் தெரிவித்துள்ளார்.