டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை!

இந்திய ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிப்பதாக சீனாவின் 59 மொபைல் செயலிகளைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றங்களில் புதுமையைப் புகுத்துவதில் முன்னோடியாக உள்ளது. டிஜிட்டல் வெளியில் இந்தியா ஒரு முதன்மைச் சந்தையாகவும் திகழ்கிறது.

ஆனால், அதே சமயத்தில் 130 கோடி இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு, மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் பாதுகாப்பது ஆகியவை பற்றிய கவலைகளும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் இத்தகைய கவலைகள் நம் நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் நிலைக்கும் சென்றிருப்பதாக பலராலும் கவலை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில் மொபைல் செயலிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பல தரப்பிலிருந்தும் எங்களுக்குப் புகார் வந்தவண்ணம் இருந்தன. அதாவது பயனாளர்கள் தரவுகள் திருடப்படுவதாகவும் அனுமதியின்றிப் பயனாளர்கள் தரவுகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்களுக்கு மாற்றப்படுவதாகவும் எங்களுக்குப் புகார்கள் வந்தன.

இந்தத் தரவுகள் சேகரிப்பு , புதிய தகவல்களைப் பெறுவதற்காக முந்திய தரவுகளை அலசுவது ஆகியவற்றை தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் சக்திகள் தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதற்காகப் பயன்படுத்தலாம் என்ற அச்சுறுத்தல் மிகவும் ஆழமான கவலைகளை உருவாக்கவல்லது.

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்விவகார அமைச்சகம் ஆகியவையும் இந்த தீங்கு விளைவிக்கும் செல்போன் செயலிகளை முடக்கப் பரிந்துரைத்தன. இதன் அடிப்படையிலும் இது தொடர்பான நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இத்தகைய செயலிகள் இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய அரசு செல்பேசி மற்றும் செல்பேசி அல்லாத இணையதளச் செயலிகளின் பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கும் முடிவை எடுத்துள்ளது.

இந்தத் தடையினால் கோடிக்கணக்கான இந்திய செல்பேசி மற்றும் இணையதளப் பயன்பாட்டாளர்களைப் பாதுகாக்கும். இந்திய சைபர்வெளியின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.