கட்டுக்கட்டாக பணம்… காட்டிக்கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்… மூன்று பேர் கைது..!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது.

அந்த வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் அடிக்கடி வந்து செல்லும் பயணிகள் பலர் தங்கம், வெள்ளி, மின்னணு பொருட்கள், ஹவாலா பணம் போன்றவற்றை கமிஷன் அடிப்படையில் கடத்தி வருவது வழக்கமாக விமான நிலையங்களில் நடைபெறும் ஒன்று. இவ்வாறு கடத்தி வருபவர்களை குருவிகள் என்று அழைப்பார்கள்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 22-ந் தேதி நள்ளிரவு விமான நிலையம் அருகில் இருந்து 3 பேர் ஆட்டோவில் சவாரி செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக பணம் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர், இதுபற்றி திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்து, தான் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருப்பதாக கூறினார்.

உடனே நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சுப்பிரமணியபுரம் அருகே அந்த ஆட்டோவை மடக்கினார்கள்.

பின்னர் ஆட்டோவில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.5 லட்சத்து 14 ஆயிரத்து 900 கட்டு, கட்டாக இருந்தது. ஆனால் அவர்களிடம் அந்த பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் கே.கே.நகர் போலீசில் ரோந்து போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்புக்கரசு வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்ததுடன், ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்தார். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மன்னார்புரம் அருகே ஆட்டோவில் வந்துகொண்டிருந்த டிரைவரை, 3 பேரும் வழிமறித்து, தங்களை இவன்தான் காட்டிக்கொடுத்தான் என்று கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசில் ஆட்டோ டிரைவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார், மூன்று பேரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.