கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுமா?

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனம் தன்னுடைய சேவையை தொடர்ந்து வழங்குமா? என்ற கேள்வி அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்போது எழுந்துள்ளது.

அதுவும் குறிப்பாக நாட்டின் பொதுத்துறை போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா இந்த நிதி நெருக்கடியை சந்தித்திருப்பது போக்குவரத்து வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதிநெருக்கடியால் தவித்து வந்தாலும் விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படாது, என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 200 நாட்களாக எரிபொருள் அந்நிறுவனம் செலுத்தவில்லை. மொத்தம் 4,500 கோடி ரூபாய் தொகையை செலுத்தவில்லை. அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை.

வழக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் 90 நாட்கள் வரை தான் கடன் வழங்குவது வழக்கம். ஆனால் 200 நாட்கள் தாண்டியும் ஏர் இந்தியா இதனை திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் வரையில் மட்டுமே சம்பளம் வழங்கும் சூழல் உள்ளது. அதற்கு பிறகு சம்பளம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத சூழல் உள்ளது.

இந்தநிலையில் ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோகானி கூறியதாவது: ‘‘ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது உண்மை தான். எனினும் விமானப் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசுடனும் ஆலோசனை நடந்து வருகிறது’’ எனக் கூறினார்.