கொரோனவால் உலகளவில் ஆணுறை பற்றாக்குறை

கொரோனா தொற்று நோய் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விநியோகம் கடுமையாக தடைபட்டுள்ளது. இதனால், உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை மூட வேண்டி இருந்ததாலும், சர்வதேச போக்குவரத்து வழிகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஆணுறைகள் உள்ளிட்ட கருத்தடை மருந்துகள் உலக அளவில் பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியுள்ளதால், அந்தந்த நாட்டு அரசுகள் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த வேண்டியிருந்தது. இதனால், பல தொழில்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளை நிறுத்தின. உலகின் சில முக்கிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க இடையூறை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் ஐந்தில் ஒரு ஆணுறையை உருவாக்கும் மலேசிய உற்பத்தியாளரான கரேக்ஸ் பி.டி., முடக்கப்பட்டதால் ஒரு வாரத்திற்கும் மேலாக அதன் தொழிற்சாலைகளில் ஒரு ஆணுறை கூட தயாரிக்க முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் மார்ச் 27-ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல டூரெக்ஸ் பிராண்ட் ஆணுறையை தயாரிக்கும் கரேக்ஸ் நிறுவனம், அரசின் சிறப்பு அனுமதியின்பேரில் அதன் பணியாளர்களில் 50 சதவீதத்தினரை மட்டுமே கொண்டு செயல்பட முடிந்ததால் 100 மில்லியன் ஆணுறைகள் பற்றாக்குறை இருப்பதாக இந்த செய்திகள் கணித்துள்ளன.

கரெக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கியாட் கூறியதை மேற்கோள் காட்டியுள்ள ப்ளூம்பெர்க், பல நாடுகள் முடக்குதலை நடைமுறைப்படுத்தியுள்ளதால் ஆணுறைகளின்தேவை “இரட்டை இலக்கங்களில்” அதிகரித்து வருவதாகவும், நிச்சயமற்ற எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெறுவதை பலர் தவிர்க்கிறார்கள் என்றும் கூறினார்.

பிற உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விநியோக பற்றாக்குறையை ஈடுசெய்ய தாய்லாந்தைச் சேர்ந்த தாய் நிப்பான் ரப்பர் தொழிற்சாலையான பிசிஎல் அதன் ஆண்டு சராசரி உற்பத்தியைவிட 27 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது, என்றும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

கருத்தடை மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளிலும் முக்கிய அங்கமான ஆக்டிவ் மருந்து பொருட்கள் (அல்லது ஏபிஐ) தயாரிப்பதில் சீனா ஒரு முன்னணி உற்பத்தியாளராக உள்ளது. கொரோனா தொற்று பரவலால் சீன உற்பத்தி ஸ்தம்பித்ததால், இது இந்தியாவில் மூலப்பொருள் பற்றாக்குறை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா உலகின் மிகப்பெரிய மருந்து பொருள் தயாரிப்பு நாடுகளில் ஒன்றாகும்.

இதைத் தொடர்ந்து, மார்ச் 3-ம் தேதி, 26 அத்தியாவசிய மருந்துகள், மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்தது, இந்தியாவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம். இதில் புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் மருந்து உட்பட பல கருத்தடை மருந்துகளைத் தயாரிக்கத் தேவையான ஒரு முக்கிய மருந்தும் அடங்கும்.

மேலும், கப்பல் உள்ளிட்ட சர்வதேச போக்குவரத்து வழித்தடங்களின் தடைகளும் கூடுதலாக தாமதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.