மது குடித்தால் கொரோனா வராதா? – விளக்கம்

சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் மது அருந்தினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம் என்ற வாதம் நடைபெற்றுக்கொண்டே வருகிறது. ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்களைக் கொண்டு கைகளைக் கழுவுவது என்பது ஒன்று. ஆல்கஹால் குடிப்பது என்பது வேறு. சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களை நம்பி ஈரானில் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை அருந்தி 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து உலக சுகாதாரத்துறை,”மது அருந்துவது கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து உங்களை நிச்சயமாக பாதுகாக்காது. ஆல்கஹாலை எப்போதும் மிதமாக உட்கொள்ள வேண்டும். மேலும், மது அருந்தாதவர்கள் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் குடிக்கத் தொடங்கக்கூடாது.” என்றும் கூறியுள்ளது.

மன அழுத்தத்தையும் சோர்வையும் போக்க ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஹவுன்ஸ் மிதமாக குடிப்பது தீங்கு விளைவிக்காது. ஏனென்றால், ஆல்கஹால் பதட்டத்தைக் குறைக்கும் ரசாயனங்களை வெளியிடுகிறது.இருப்பினும், அதிகப்படியான குடிப்பழக்கம் கொரோனா வைரஸுக்கு எதிராக உடலை பலவீனப்படுத்தலாம். அல்லது, ஈரானில் நடந்ததைப் போல, குடிப்பவர் உயிரிழக்க நேரிடும்.

கொரோனா வைரஸ் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வரும் வேளையில், பிற வைரஸ் பரவல்கள் குறித்த ஆராய்ச்சியில் அதிகப்படியான ஆல்கஹால் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதிகமாக குடிப்பவர்கள் குறிப்பாக, சுவாச நோய் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்படுவதாகக் காணப்படுகிறது. அதனால், தொற்றுநோயிலிருந்து மீள அதிக காலம் ஆகிறது. அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவது நுரையீரலையும் சேதப்படுத்தும். மேலும் கொரோனா வைரஸும் நுரையீரலை பாதிப்புக்கு உண்டாக்கும். கொரோனா மட்டுமில்லாமல் சளி,காய்ச்சல் உள்ளவர்கள் கூட மதுவை தவிர்ப்பது நல்லது.

மனச்சோர்வுக்காக மது அருந்துவது நல்லது என்ற வாதம் ஒருபுறம் இருக்க, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆல்கஹால் ஏற்படுத்தும் விளைவு பதட்டத்தைக் குறைக்க வழிவகுக்கும் எனக் கண்டறியப்படுகிறது. ஆனால் அது ஆல்கஹால் இரத்தத்தில் நீடிக்கும் வரை மட்டுமே. பிறகு ஆல்கஹால் இரத்தத்தில் பூஜ்ஜித்தின் அளவை நெருங்கும் போது, நரம்பு மண்டலம் இரத்தத்தில் உள்ள ரசாயனங்களை முந்தைய செறிவுகளுக்கு மீட்டெடுக்க முயற்சிக்கும். அது எப்போதும் குடிப்பவரை கவலையடையச் செய்யலாம்.