சுஷ்மா சுவராஜ் அவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!

பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று இரவு 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 9.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார். 70 நிமிடங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து மோசமாக சென்றுகொண்டிருந்தது. இரவு 10.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இவரின் இறப்புக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சுஷ்மா சுவராஜ் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த பெண்மணியாக திகழ்ந்தார், இவர் இந்தியாவை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், சுஷ்மா சுவராஜ் அவர்கள் தனது இந்திய குடி மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடினார் என்று விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் தனது வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், விவியன் பாலகிருஷ்ணன் கூறுகையில், சுஷ்மா அவர்களை பலமுறை சந்தித்து இருப்பதாகவும், இந்த தருணத்தில் அவர்களுடைய உணர்வுபூர்வமான நட்பையும் மற்றும் அவர்களின் ஆலோசனையும் இந்த தருணத்தில் நினைவு கூறுவதாக கூறினார். மேலும் அவரின் இழப்பு செய்தி எங்கள் இதயங்களை உடைத்து விட்டது, என்றும் குறிப்பிட்டிருந்தார்.