‘வந்தே பாரத் மிஷன்’: சிங்கப்பூரிலிருந்து 87,055 பேர் இந்தியா திரும்பினர்!

 

உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஆட்டிப்படைத்தபோது, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இந்தியர்கள் தவித்தனர்.

 

இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக விமானம் மூலம் அழைத்து வர இந்திய விமான போக்குவரத்துத்துறை ‘வந்தே பாரத் மிஷன்’ என்றத் திட்டத்தைத் தொடங்கியது. அதன்படி, விமானம் எங்கிருந்து எப்போது புறப்படும் என்பது தொடர்பான விமான போக்குவரத்து அட்டவணையை இந்திய விமான போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களில் தாயகம் திரும்ப விரும்புபவர்கள் விமான போக்குவரத்துக் கட்டணத்தை இணையதளம் மூலமாகச் செலுத்தி விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்புகின்றனர்.

 

அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் 18- ஆம் தேதி வரை ‘வந்தே பாரத் மிஷன்’ மூலமாக இயக்கப்பட்ட 629 விமானங்களில் 87,055 பேர் சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர் என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் இருந்து தினந்தோறும் சராசரியாக சுமார் 180 இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்புகின்றனர்.

 

சிங்கப்பூரில் இதுவரை 61,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.