வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி, தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் தமிழர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு நேற்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சைதை சுப்பிரமணி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை உடனடியாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இதை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது, “கொரோனா தாக்குதலால், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து விட்டார்கள். அன்றாட உணவுக்கு வழி இன்றித் தவிக்கின்றார்கள்.
அவர்களது நிலையை எண்ணி, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தங்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து, புறப்பட்டு வர இருந்த விமானத்தையும், கடைசி நேரத்தில் மத்திய அரசு நிறுத்திவிட்டது.
கேரள அரசு, தங்கள் மாநிலத்தவரை மீட்டு வருகின்ற பணிகளை வெற்றிகரமாகச் செய்து வருகின்றது. அதேபோல், பல மாநில அரசுகளும் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழக அரசு விமானத்தில் இருந்து வந்து இறங்குவதற்கு ஒப்புதல் தரவில்லை.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குப் போதுமான விமானங்களை மத்திய அரசு அறிவிக்கவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை, நடத்துகின்றோம். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக, தமிழக அரசு ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த வழக்கை அரசை விட, நீதிமன்றம் சரியாக கையாண்டிருக்கிறது. வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை.” இவ்வாறு அவர் கூறினார். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக, தமிழக அரசு ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும்.