இந்தியர்களை மீட்க அனுப்பும் சிறப்பு விமானங்களை அனுமதிக்க மறுக்கும் அமெரிக்கா

இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க வந்தே பாரத் என்ற சிறப்பு விமானங்களும் கப்பல்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியர்களை மீட்பதற்காக பயன்படுத்தப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு செல்ல அமெரிக்க விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு விமானங்களில் பொதுமக்களிடம் இருந்து கட்டணத்தை பெற்றுக் கொண்டு ஏர் இந்தியா விமானம் செயல்படுவதாகவும் அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் இந்திய விமானங்களுக்கான அனுமதியை மறுத்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை பாகுபாட்டை ஊக்குவிக்கும் செயல் என மத்திய அரசு விமர்சனம் செய்துள்ளது. விமானங்கள் உண்மையில் மீட்பு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் ஏர் இந்திய விமானங்கள் ஒரு நாட்டின் விமான கட்டுப்பாடுகளை மீறும் வகையில் மீட்பு பணிகளில் ஈடுபடுகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த உத்தரவு 30 நாட்களுக்கு செல்லும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.