திருச்சி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகள் அதிகரிப்பு!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இதில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகின்றன.

‘அக்டோபர் 30 முதல் திருச்சி, தோஹா இடையே கூடுதல் விமான சேவை’-ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

அதற்கு அடுத்தப்படியாக, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகின்றன.

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு வாரத்தில் 82 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், அதிகபட்சமாக மலேசியாவுக்கு 28 மற்றும் சிங்கப்பூருக்கு 21 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான சேவைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 30 சேவைகளையும், இண்டிகோ ஏர்லைன்ஸ் 17 சேவைகளையும், ஏர் ஏசியா 14 சேவைகளையும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 7 சேவைகளையும், ஸ்கூட் 7 சேவைகளையும், மலிண்டோ 7 சேவைகளையும் வழங்கி வருகின்றன.

‘செப்டம்பர் 2 முதல் திருச்சி, கோலாலம்பூர் இடையே கூடுதல் விமான சேவை’-ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வாரத்தில் வெளிநாடுகளுக்கான விமான சேவை 72 ஆக இருந்த நிலையில், ஜூன் மாதம் 1-  ஆம் தேதி முதல் 82 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 493 வெளிநாட்டு விமான சேவைகளில் 68,188 பயணிகளை கையாண்டு, இந்திய அளவில் அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகளை கையாண்ட சர்வதேச விமான நிலையங்களில் 11வது இடத்தில் திருச்சி சர்வதேச விமான நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.