சிங்கப்பூரில் ஆபரேஷன் மூலம் பெண்ணாக மாறிய கோவை பி.டெக் பட்டதாரி – பெற்றோரிடமிருந்து காப்பாற்ற கதறல்

கோவையில் கொலை செய்து விடுவதாக மிரட்டும் பெற்றோரிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பி்டெக் படித்த திருநங்கை சீமாட்சி என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த பிடெக் பட்டதாரியான சதீஷ்குமார், சிங்கப்பூருக்கு வேலை சென்ற போது, கடந்த 2011ம் ஆண்டு அங்கு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரை சீமாட்சி என மாற்றிக்கொண்டார். சதீஷ்குமார் பெண்ணாக மாறியதை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தனது தந்தை உத்தமன், தாய் மல்லிகா ஆகியோருக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்த திருநங்கை சீமாட்சி, கடந்த 2013ல் இந்தியா திரும்பி உத்தரகான்ட் மாநிலத்தில் திரேந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கணவர் திரேந்திர குமார் இறந்து விடவே திருநங்கை சீமாட்சி சமீபத்தில் கோவை விளாங்குறிச்சி திரும்பினார். விளாங்குறிச்சியில் உள்ள பூர்வீக வீட்டிற்கு வந்த சீமாட்சியை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்தாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, விளாங்குறிச்சி அம்பேத்கர் நகரி்ல் வசித்து வந்த சீமாட்சியை அவரது பெற்றோரும் உறவினர்களும் அடித்து துன்புறுத்தியதாக அவரே புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து திருநங்கை சீமாட்சி தனது பெற்றோர் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு, பேட்டியளித்த போது, தனது முடியை வெட்டி அடித்துத் துன்புறுத்தியதுடன், கௌரவ கொலை செய்து விடுவதாக பெற்றோர் மிரட்டுவதாக கூறியிருக்கிறார்.

மேலும், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் விளாங்குறிச்சியில் உள்ள பூர்வீக வீட்டில் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பான வாழ்விற்கு மாவட்ட ஆட்சியர் உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.