தமிழகம் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதி – அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனாவால் பலர் மரணமடைந்து வருகின்றனர். மேலும் 1,637 பேர் பாதிக்கப்பட்டு, 132 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 64 பேராக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 234 பேராக உயர்ந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு 77,330 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசின் முகாம்களில் 81 பேர் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 19 மாவட்டங்களை சேர்ந்த 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தொடக்கத்தில் குறைவாக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக 50ஐ எட்டியது. அதன்பிறகு, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது.

இதுவரை மொத்தம் 234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.