வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியவர்களுக்கு உதவும் திறனை அதிகரிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இக்கழகமானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து அவர்களது வேலை பெறும் திறனை அதிகரித்து அதன் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்று வழங்கும் சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தற்போது உலகளவில் கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தையடுத்து வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் துறைகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியார் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டுவருகிறது.
வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற உதவுவதற்கென, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளத்தில் https://www.tnskill.tn.gov.in பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளப்பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.