வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக தமிமுன் அன்சாரி MLA முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு டி.ராஜேந்தர் ஆதரவு!

தமிழர்களை தாங்கிப் பிடிக்க இந்த பாதாகையை தாங்குகிறேன் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ நடத்தி வரும் போராட்டத்திற்கு டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தமிழர்களை மீட்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழா்களை மீட்டுக் கொண்டுவர ரூ.255 கோடி செலவாகும். இதை மத்திய அரசு தர மறுத்தால், தமிழக அரசே ஈடுகட்டலாம். டாஸ்மாக் மூலம் ஒரு நாளைக்கு ரூ.85 கோடி வருமானம் உள்ள நிலையில், இதை ஒப்பிடும்போது மூன்று நாள்கள் டாஸ்மாக் வருவாயே போதுமானது என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் டி.ராஜேந்தர் தமிழர்களை தாங்கிப் பிடிக்க இந்த பதாகையை தாங்குகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் கையில் ஏந்தியுள்ள பதாகையில், வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் மீட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.