சர்வதேச சிறப்பு விமானங்களில் நடு இருக்கை காலியாக இருக்க வேண்டும் – ஏர் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-ம் தேதிக்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும் என்று ஏர் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை அழைத்து வரும்போது, கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் பின்பற்றவில்லை என ஏர் இந்தியா விமானி யோகேஷ் தேவன் கனானி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட், நடு இருக்கை டிக்கெட்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. இதையடுத்து, உடனடியாக ஏர் இந்தியா மற்றும் மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

ரம்ஜானை முன்னிட்டு நேற்று கோர்ட்டுக்கு விடுமுறை என்ற போதிலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, ஜூன் 6ம் தேதி வரை விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நடுப்பகுதி இருக்கையிலும் பயணிகள் அமர்ந்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும்? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஜூன் 6-ந்தேதி வரை அதாவது அடுத்த 10 நாட்கள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைக்கலாம். அதன் பிறகு நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைக்கக் கூடாது. காலியாக வைக்க வேண்டும். விமான நிறுவனங்கள் முன்பதிவில் நடுப்பகுதி இருக்கையை காட்டக்கூடாது.

வர்த்தக விமான நிறுவனங்களின் நலனைவிட குடிமக்களின் ஆரோக்கியம் குறித்து அரசாங்கம் அதிகம் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.