இந்தியாவில் அதிகளவில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் (SpiceJet). அதேபோல், இந்நிறுவனம் ஓமன், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், மிகவும் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை இந்த நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்த நிலையில், விமானிகளுக்கான பயிற்சிக்கு பழுதான கருவிகளைப் பயன்படுத்தியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிறுவனத்தில் 90 விமானிகளுக்கு மீண்டும் பயிற்சி வழங்கவும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை, அந்த விமானிகள் விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட இயந்திரம் கோளாறாக இருந்ததாகக் கூறி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.