மொட்டை அடித்து குழந்தைகளுக்கு பசியாற்றிய தாய் – சேலத்தில் உருக்கம்

”குழந்தைகளுக்கு கஞ்சி கரைத்து ஊற்றுவதற்குக்கூட கையில காசு இல்ல. ரெண்டு நாளா குழந்தைங்க கொலபட்டினியாகப் பசியில் அழுவதைப் பார்க்க முடியல. எங்க வீட்டுல இருந்து நாலு தெரு தாண்டி போனால் தலை முடியைக் காசுக்கு வாங்குவார்கள். அங்கு போய் மொட்டை அடிச்சி என் தலை முடியைக் கொடுத்துட்டு 150 ரூபாய் வாங்கிட்டு வந்து குருணை அரிசியில் கஞ்சி காய்ச்சி ஊற்றினேன்” என்று வறுமையின் கொடுமையால் கண் கலங்குகிறார் தாய் ஒருவர்.

சேலம் பொன்னம்மாபேட்டை பாண்டியன் தெருவில் வசிப்பவர் சுப்ரமணி, பிரேமா தம்பதியினர். இவர்கள் குடும்பம் வறுமையில் வாடிவருகிறது. தினந்தோறும் செங்கல் சூளையில் செங்கல் அறுத்தால்தான் சாப்பாடு. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சுப்ரமணி உடல்நிலை சரியில்லாமல் சமீபத்தில் இறந்து போக பிரேமா தன்னுடைய மூன்று குழந்தைகளையும் செங்கல் அறுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறார்.

பிரேமாவுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகக் குழந்தைகளுக்கு உணவு சமைத்து போடக் கையில் காசு இல்லை. இதனால் மூன்று குழந்தைகளும் பசியால் துடித்து அழுதிருக்கிறார்கள். இதைப் பார்க்க சகிக்க முடியாத தாய் பிரேமா தன் தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கி இருக்கிறார். இத்தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவ மாவட்ட ஆட்சியர் ராமன் உட்படப் பலரும் பிரேமாவுக்கு உதவிக் கரம் நீட்டி இருக்கிறார்கள்.

இதுகுறித்து பிரேமா கூறுகையில், ”நானும் எங்க வீட்டுக்காரர் சுப்ரமணியும் செங்கல் சூளையில் வேலைச் செஞ்சி அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தோம். எங்களுக்கு 7 வயது காளியப்பன், 4 வயதில் தர்மலிங்கம், 2 வயதில் குணசேகரன் என மூணு குழந்தைங்க இருக்காங்க. எங்க வீட்டுக்காரர் சுப்ரமணி ஏழு மாசத்துக்கு முன்பு திடீரென உடல் நிலை சரியில்லாமல் இறந்துட்டாரு.

எங்க வீட்டுக்காரர் தரப்பிலும் பெருசா உறவினர்கள் இல்லை. எங்க வீட்டு தரப்பிலும் பெருசா உறவினர்கள் இல்லை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவோ, ஒரு ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதற்கோ யாரும் இல்லை. எந்த ஆதரவும் இல்லாமல் நாங்க வாழ்ந்துகொண்டு இருந்தோம். நான் எங்க போனாலும் என் பின்னாடியே குழந்தைகளும் வருவாங்க.

தினமும் செங்கல் சூளைக்கு வேலைக்குப் போகும் போது அவுங்களை கூட்டிட்டு போய் மரத்தடியில் உக்கார வச்சுட்டு செங்கல் அறுப்பேன். மாலையில் வீட்டுக்கு வரும்போது கூட்டிகிட்டு வருவேன். செங்கல் அறுத்ததில் கிடைக்கும் கூலியை வாங்கி பத்தும் பத்தாமல் என் குழந்தைகளின் பசியையும் போக்கிட்டு இருந்தேன். இந்த நிலையில் எங்க வீட்டுக்காரர் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தார். அவுங்க கடனை கேட்டு தொந்தரவு செய்தாங்க. இதனால் வாழ வழி தெரியாமல் தவிச்சுட்டு இருந்தேன்.

சமீபத்துல எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு குழந்தைகளுக்கு கஞ்சி ஊற்றுவதற்குக்கூட கையில காசு இல்ல. ரெண்டு நாளா குழந்தைங்க கொலபட்டினியாகப் பசியில் அழுவதைப் பார்க்க முடியல. எங்க வீட்டுல இருந்து நாலு தெரு தாண்டிப் போனால் தலை முடியைக் காசுக்கு வாங்குவார்கள். அங்கு போய் மொட்டை அடிச்சி என் தலை முடியைக் கொடுத்துட்டு 150 ரூபாய் வாங்கிட்டு வந்து குருணை அரிசியில் கஞ்சி காய்ச்சி ஊற்றினேன். என்னோட கஸ்டத்தை யாரோ போனில் போட்டோ எடுத்து எழுதி இருக்காங்க. அதனால் சிலர் உதவி செஞ்சிருக்காங்க. கலெக்டர் ஐயாவும் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்திருக்கிறார்” என்றார்.

Source: Vikatan