இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி – சிங்கப்பூர் பிரதமர் பெருமிதம்

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 74-வது அமர்வு நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், 90களின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை பாராட்டி பேசினார்.

அவர் பேசியபோது, “இந்தியாவில், 90களில் பொருளாதாரம் தாராளமயமான பிறகு, அதன் கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து நிலையான வளர்ச்சியை அடைந்து வருகிறது” என்று கூறினார்.

மேலும், “நிலையான வளர்ச்சிக்கு எல்லா நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, வறுமையை ஒழிப்பது உள்ளிட்ட சவால்களை அனைத்து நாடுகளும் சந்தித்து வருகின்றன.

பிற நாடுகளின் உதவியின்றி தனித்து முன்னேறுவது மிகவும் கடினமான செயல். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாகும்” என்று கூறினார்.

முன்னதாக ஐ.நா பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பருவநிலை மாற்றம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.