ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கற்பழித்துக் கொலை..!

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. ஷாம்ஷாபாத் பகுதியில் வசித்துவந்தார். இவர் ஒரு கால்நடை மருத்துவர், கொல்லப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர்.

தினமும் ஆஸ்பத்திரிக்கு வீட்டிலிருந்து டூவீலரில்தான் சென்று வருவார். நேற்று இரவும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் பிரியங்கா. அப்போது திடீரென டூவீலர் பஞ்சர் ஆகி உள்ளது.

நடுரோட்டிலேயே என்ன செய்வதென்று பிரியங்கா விழித்து நிற்க, அங்கிருந்த ஒரு லாரி டிரைவர் பிரியங்காவிற்கு உதவி செய்ய முன்வந்தார். உடனே தன் வீட்டுக்கும் வண்டி ரிப்பேர் ஆகிவிட்டதை பிரியங்கா சொல்லி உள்ளார்.

“என் சகோதரி இரவு 9.22 மணிக்கு என்னை அழைத்து, இரண்டு (அறியப்படாத) நபர்கள் தனக்கு உதவ முன்வந்ததாகக் கூறினார், ஆனால் அவர்கள் டயர் பழுது பார்ப்பதற்கு முன் திரும்பி சென்றதாகவும், மேலும் லாரி அருகிலேயே பல நபர்களும் இருந்ததாகவும், தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, நான் அவளிடம் டோல் பிளாசாவில் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினேன்,’’ என்று பிரியங்கா தங்கை ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

ஆனால் சிறிது நேரத்தில் பிரியங்காவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. வீட்டில் இருந்தவர்கள் இதனால் பதறி போய், சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். ஆனால், அங்கு பிரியாங்காவை காணவில்லை. கலக்கம் அதிகமாகிய அவர்கள், உடனடியாக போலீசில் சென்று இதுகுறித்து புகார் தந்தனர். இதையடுத்து போலீசார் பிரியங்காவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹைதராபாத் – பெங்களூர் ஹைவே பகுதியில் ஷாத்நகர் பாலத்துக்கு அடியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, பாலத்துக்கு அடித்தை மீட்க விரைந்தனர். யூகித்தபடியே அது பிரியங்காவின் சடலம்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

26 வயதான பிரியங்கா ரெட்டி பஞ்சர் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் பழுதுபார்க்க உதவ முன்வந்த இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரது இரு சக்கர வாகனம் பழுதான இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் அவரது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவின் அனந்தபூரைச் சேர்ந்த ஒரு லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இரு சந்தேக நபர்களையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.