தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை செல்பி எடுத்து அனுப்ப வேண்டும்..!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒரு முறை செல்ஃபி எடுத்து மொபைல் செயலி மூலம் அனுப்ப வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனிமைப்படுத்தப்பட்டோரை கண்காணிப்பதற்கான மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒரு முறை ஜிபிஎஸ் அமைப்புடன் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும்.

ஜிபிஎஸ் இருப்பதன் காரணத்தினால் புகைப்படம் அனுப்புபவரின் இருப்பிடத்தை எங்களால் அறிந்துக்கொள்ள முடியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை அம்மாநில அதிகாரிகள் குழு ஆய்வுசெய்யும் என்றும், புகைப்படங்கள் தவறானது என்று கண்டுபிடிக்கப்பட்டால், தனிமைப்படுத்தப்படும் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.