சென்னையை சேர்ந்த இளம்பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்கையில் அதிலிருந்து ஏராளமான பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள், போட்டோக்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்தநிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரின் தொப்பியை அணிந்து இளம்பெண்ணின் மடியில் படுத்துக்கொண்டு செல்பி எடுத்த புகைப்படம் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் காசி ஏற்கனவே போலீஸ் அதிகாரி ஒருவரின் மகளிடம் நெருங்கி பழகியது தெரியவந்துள்ளது.
வெளி மாவட்டத்தை சேர்ந்த அந்த அதிகாரி நாகர்கோவிலில் தங்கியிருந்தபோது அவரது வீட்டிற்கும் காசி அடிக்கடி சென்று வந்துள்ளார். நாளடைவில் பணிநிமித்தமாக பெண்ணின் தந்தை இடமாற்றம் செய்யப்பட்டார்.
அந்த நேரத்தில் தான் அவரது அப்பாவின் தொப்பியை எடுத்து தலையில் அணிந்து கொண்டு இளம்பெண் மடி மீது படுத்துக்கொண்டு காசி செல்பி எடுத்துள்ளார். பின்னர் அவருடன் எடுத்து வந்த புகைப்படங்களையும் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க நாகர்கோவிலில் உள்ள மற்றுமொறு போலீஸ் அதிகாரியின் மகனுடன் காசி நண்பராக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். இது அந்த போலீஸ் அதிகாரிக்கும் நன்றாக தெரியும் என்று கூறப்படுகிறது.
இதனால் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, போலீசார், வக்கீல் என்று எல்லோரும் என்னிடம் உள்ளனர் என்று காசி, பெண்களிடம் பேசியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் பெண்களை மிரட்டி வந்ததும் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்தில், காசியின் நண்பர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, சார்ஜாவில் உள்ள அவரது நண்பரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரபு நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர். அவ்வாறு காசியின் கூட்டாளியும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது புகைப்படம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய நோட்டீஸ் ஒன்றை விமான நிலையங்களுக்கு கன்னியாகுமரி தனிப்படை போலீசார் வழங்கியுள்ளனர்.
நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் கூறுகையில், ‘நாகர்கோவில் வக்கீல்கள் சங்கம் தீர்மானத்தின்படி கன்னியாகுமரி மாவட்ட வக்கீல்கள் யாரும் இந்த காசி வழக்குகளில் ஆஜராகமாட்டார்கள்’ என்றார்.