சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்தில் இருந்து புறப்பட்டார்..!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தார். அவர், நேற்று பிரதமர் மோடியுடன் சேர்ந்து மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்தார் . கடற்கரையில் இருந்த சிற்பங்களை பார்வையிட்ட அவர், பிரதமர் மோடியுடன் இணைந்து இரவு உணவு உண்டார்.

இரண்டாவது நாளான இன்று, காலை நட்சத்திர விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக கோவளம் புறப்பட்டார். அப்போது சாலையோரம் பல கலை நிகழ்ச்சிளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவளம் சென்ற சீன அதிபரை அங்கு ஏற்கனவே நட்சத்திர விடுதி வாசலில் காத்திருந்த பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் பேட்டரி காரில் நட்சத்திர விடுதிக்கு உள்ளே இருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. விடுதியின் கடற்கரையோரம் இருந்த கண்ணாடி அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கடற்கரையோரம் நடந்தபடி கலந்துரையாடினர். தொடர்ந்து, இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து தனது பயணத்தை முடித்துக்கொண்ட சீன அதிபரை, பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். இதையடுத்து கோவளத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

சீன அதிபர் வழியனுப்ப தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வழியனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து அடுத்த சுற்றுப்பயணமாக நேபாள நாட்டுற்கு புறப்பட்டு சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.