இந்திய பிரதமர் மோடியின் அடுத்த பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார். அங்கே, அதிபர் இம்மானுவேல் மேக்ரனை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கூடுதலாக, ராணுவம், கடல் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், அணுமின் உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தகவல் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் பாரீசிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சேட்டியு டி சேண்டில்லி-யில் ( Chateau de Chantilly ) அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் மோடிக்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார்.

இந்த பயணத்தின்போது, பிரான்சில் உள்ள இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாள் அரசு முறைப் பயணத்தை நாளை முடித்துக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் பிரான்சின் பியாட்டிஸ் ( Biarritz ) நகரில் நடைபெற உள்ள G-7 மாநாட்டில் பங்கேற்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.