இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பு – ஒரு வரலாற்று சந்திப்பு !

ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்குள்ள என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நலமா மோடி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது, மோடியை வரவேற்கும் விதமாக பரதநாட்டியம், குச்சிப்புடி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய கலச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களும், அமெரிக்காவின் நடன நிகழ்ச்சிகளும் வண்ணமயமாக நடைபெற்றன.

அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இணைந்து பிரதமர் விழா அரங்கிற்கு வந்ததும், மோடி என முழக்கமிட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேடைக்கு வந்ததும் பிரதமர் மோடி தலைவணங்கி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தேசிய கீதங்கள் அடுத்தடுத்து இசைக்கப்பட்டன.

கனவுகளை பகிருங்கள், ஒளிமையமான எதிர்காலம்” என்ற தலைப்பில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, உலக அரசியலை நிர்ணயிக்கும் நபராக ட்ரம்ப் திகழ்வதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலிமை மிக்கதாக மாற்றியவர் ட்ரம்ப் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், இது ட்ரம்ப் சர்க்கார் என்றும் கூறி விழா அரங்கை அதிர வைத்தார்.

மோடியை தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், 30 கோடி மக்களை இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது. அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா. மோடியை தவிர வேறு சிறந்த நபரை இந்தியா பெற்றிருக்காது. விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் அதிகளவு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் விருப்பம் . புகழ்பெற்ற என்.பி.ஏ கூடைப்பந்து போட்டியை மும்பையில் நடத்த உள்ளோம். எல்லை பாதுகாப்பு பிரச்னையை அமெரிக்கா உணர்ந்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மற்றும் அமெரிக்க மக்களை பாதுகாக்க இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார்.

ட்ரம்பின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, முன்னேற்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு வளர்ந்துள்ளது. என்னை நலமா என்று கேட்கிறீர்கள். ஆனால், இந்தியர் அனைவரும் நலம், எல்லோரும் சவுக்கியம் என தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரதமர் பதிலளித்தார்.