மலேசியா உட்பட தெற்காசிய நாடுகளுக்கு இப்படி ஒரு அவப்பெயரா? நாமாவது தவிர்ப்போமே!

சீனா, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தான் சர்வதேச அளவில் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளாவிய நிதி அமைப்பு (World Wide Fund (WWF)) நடத்திய ஆய்வின்படி, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலேயே அதிகளவில் பிளாஸ்டிக் பேக்கேஜிங் முறத அமலில் உள்ளது. பேக்கேஜிங் மார்க்கெட்டிங் முறையிலான ஆய்வில் முன்னணியில் உள்ள ஜெர்மன் நிறுவனமான ஜிவிஎம் நிறுவனம் இதற்கான தரவுகளை அளித்துள்ளது.

குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் மூலமாகவே 93 சதவீத பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கப்படுகின்றன. அதிக வருமானம் கொண்ட நாடுகளின் மூலம் 4 சதவீத அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் மாசு ஏற்படுவதற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள், நுகர்பொருட்களை அடைக்கப்பயன்படும் பிளாஸ்டிக்குகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச அளவில், பேக்கேஜிங் செய்ய 36 சதவீத பிளாஸ்டிக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், மூன்றில் ஒரு பங்கு அளவிலான பிளாஸ்டிக்குகள் குப்பைகளாகவே மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில், மலேசியாவில் தான் பிளாஸ்டிக் பேக்கேஜிங் (16.78 கிலோ)அதிகளவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தாய்லாந்து (15.52), சீனா (14.08), வியட்நாம் (12.93) இந்தோனேஷியா (12.5) மற்றும் பிலிப்பைன்ஸ் (12.4) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

வருடாந்திர பிளாஸ்டிக் பேக்கேஜிங் பயன்பாடு என்ற பட்டியலில் சீனா முதலிடத்தில் ( 19,765 மில்லியன் டன்கள்) உள்ளது. இந்தோனேஷியா (3,265), பிலிப்பைன்ஸ் (1,281), வியட்நாம் (1,223), தாய்லாந்து (1,069) மற்றும் மலேசியா (523) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சீனாவில், பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், கண்டெய்னர்களை தவிர்த்து, பிளாஸ்டிக் பிலிம்கள் மற்றும் பேக்குகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்தமாக இந்த 6 நாடுகளிலிருந்து ஆண்டு ஒன்றிற்கு 27 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் 8 மில்லியன் டன்கள் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள், கடல்களை மாசுபடுத்திவருகின்றன. இவற்றில் இந்த 6 நாடுகளின் பங்கு மட்டுமே 60 சதவீத பங்கினை கொண்டுள்ளன. பிளாஸ்டிக் பேக்கேஜ்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக 2050ம் ஆண்டிற்குள் கடல்களில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு 300 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.