புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என கோரிக்கை.!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா போல, கோவில்பட்டி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கடலை மிட்டாய் தான்.

தற்போது இங்கு சுமார் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தனிச்சுவையுடன் தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சமீபத்தில் பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம், சின்னாளப்பட்டி சேலை மற்றும் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் பூட்டு என திண்டுக்கல் மாவட்டத்திலேயே 3 பொருட்களுக்கு, மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது.

இதேபோல கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கும் புவிசார் குறியீடு வழங்கி, இந்தத் தொழிலுக்கு சர்வதேச கவுரவம் சேர்க்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் புவிசார் குறியீடு வழங்கினால், இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வு மேம்படுவதோடு பல நிறுவனங்கள் கோவில்பட்டியில் தொழில் துவங்க ஆர்வம் காட்டத் துவங்கும்.

அத்தகைய நிறுவனங்களின் வருகையால் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிளாலர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு, புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோவில்பட்டி மக்களின் குரலாக ஒலிக்கிறது.