திருச்சிக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கலெக்டர் தகவல்

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் பயணிகள், தங்களது சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் எஸ்.சிவராசு விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து விமானம் மற்றும் கப்பல் மூலமாக இந்தியா திரும்புவோருக்கு சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் படுக்கை விரிப்பு, துண்டு மற்றும் போர்வை, சோப்பு, பற்பசை, பிரஸ், தேங்காய் எண்ணெய், 3 வேளை உணவு, இரு வேளை டீ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிக்க, துணி துவைக்க தேவையான வசதிகள், கை கழுவு திரவம், கிருமிநாசினி கொண்டு தங்குமிடங்களை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமான நிலையத்திற்கு வருவோரின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும். கொரோனா சோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்படும். வெப்பநிலை சோதனையில் காய்ச்சல் உள்பட வேறு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.

இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளின்படி வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோர் தங்களது சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்வதோடு 7 நாட்கள் அரசால் நிர்வகிக்கும் அரசு நிறுவனம் அல்லது மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்களது சொந்த செலவில் தங்க வேண்டும். 7 நாட்கள் முடிவடையும்போது மறு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டு மருத்துவ அறிக்கையின்பேரில் தங்களது வீடுகளில் மீண்டும் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொள்ளும் அரசாணை மேலாண்மை துறையால் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசின் அறிவுரை மற்றும் அரசாணைமாவட்ட நிர்வாகத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. உடல் வெப்பநிலை சீராக இருக்கும் பட்சத்தில் திருச்சி மாவட்டத்தைத் தவிர பிற மாவட்டங்களை சேர்ந்த வருக்கு வைரஸ் சோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு பின்னர் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுவர்.

மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட இலவச தனிமைப்படுத்துதல் வசதியை பெற விரும்புவோர் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேதுராப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரி விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு வாரம் தங்க வைக்கப்படுவர். அனுமதிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் சொந்த செலவில் தங்க விரும்புவோருக்கு தனியார் விடுதிகளின் கட்டண விவர நிர்ணய பட்டியல் தரப்படும். பயணிகள் தங்கள் தேவைக்கேற்ப இதனை தேர்வு செய்து கொள்ளலாம். அங்கு ஒரு வாரம் கண்டிப்பாக தங்க வேண்டும். தாசில்தார் தகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் இவர்களை கண்காணிப்பார்கள்.

மேலும், சில விமானங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்காக இயக்கப்படும் நேர்வில் அந்தந்த நிறுவனங்களே சோதனை கட்டணம் மற்றும் தனியார் விடுதிக் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு அல்லது தனியார் விடுதிகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்றால் உடனடியாக ஒரு வாரம் சுய தனிமைப்படுத்துதல் அறிவுரை வழங்கப்பட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பப்படுவர். கொரோனா பாதிப்பு இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.