கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் லாகோஸிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்தார். இந்த விமானம் இந்திய நேரப்படி அதிகாலை 3:40 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறந்த பயணிக்கு கிட்டத்தட்ட 40 வயது, அவர் இறப்பதற்கு முன்பு நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக விமான ஊழியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த நபர் சுவாசிப்பதில் சிரமபட்டதாகவும், அதன் பிறகு விமானக் குழுவினர் அவருக்கு ஆக்ஸிஜனை வழங்கினர் என்றும் இந்தியா டுடே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணி பின்னர் சுயநினைவை இழந்து விமானம் தரையிறங்குவதற்கு முன்பே இறந்துள்ளார்.
காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஒரு பயணி எவ்வாறு விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்விகள் இப்போது எழுப்பப்படுகின்றன. எவ்வாறாயினும், பயணி “இயற்கை காரணங்களால்” இறந்துவிட்டதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.