இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிரடி கைது! பரபரத்த டெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (ஆக.21) டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த நிலையில், அவரை கைது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள சிதம்பரம் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

இந்த நிலையில், தேடப்படும் நபர் என்ற வகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி அவரது வக்கீல்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். முன்ஜாமீன் மனு நாளை (ஆக.23) விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் கூறியது.

இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 8.30 மணி அளவில் அவர் திடீரென்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தன் மீதோ அல்லது தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையில் தன் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றும் கூறினார். அத்துடன் சட்ட நடவடிக்கைக்கு பயந்து ஓடி ஒளியவில்லை என்றும், தான் சட்டத்தை மதிப்பதை போல் விசாரணை அமைப்புகளும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டார். .

அதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் கார்களில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சென்ற போது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டி இருந்தது. கதவை திறக்குமாறு கூறியும், நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்து வீட்டுக்குள் சென்றனர்.

உள்ளே சென்ற அதிகாரிகள் ப.சிதம்பரத்துடன் சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அதன்பிறகு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சிபிஐ ஒருவரை கைது செய்கிறது என்றால், அவரை 24 மணி நேரத்திற்குள் சிபிஐ நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும். இதனால், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படலாம் என தெரிகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அமலாக்கப்பிரிவு அனுமதியை கோரும். இதற்கிடையே, சிதம்பரம் டீம் இன்று ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளது. எஃப்.ஐ.ஆரில் சிதம்பரம் பெயர் இல்லாததால், அவருக்கு நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.