நகை, பணத்துடன் சேர்த்து 750 கிராம் வெங்காயமும் திருட்டு..!

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதிக்குட்பட்ட தேவசந்திரா பகுதியில் வசித்து வருபவர் பவன், கூலி வேலை செய்து வரும் பவனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணமாகி உள்ளது.

இந்நிலையில், அவரது மனைவி உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், பவன் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றுடன் சமையல் எரிவாயு சிலிண்டர், 750 கிராம் வெங்காயம் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர்.

பவன் வீட்டிற்கு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது தங்கம், வெங்காயம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து பவன் அளித்த புகாரின் பேரில் கே.ஆர். புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கம், பணத்துடன், வெங்காயமும் திருடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.