குவைத்தில் இருந்து திருச்சி வந்த யாருக்கும் கொரோனா அறிகுறி கண்டறியப்படவில்லை

திருச்சிக்கு குவைத் நாட்டில் இருந்து 103 பேருடன் சனிக்கிழமை வந்த சிறப்பு விமான பயணிகள் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.

பொது முடக்கத்தால் குவைத்தில் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வர ஜூன் 4, 6, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என குவைத் ஏா்வேஸ் அறிவித்தது. அதன்படி ஜூன் 4 ஆம் தேதி(வியாழக்கிழமை) இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் 117 போ் அழைத்து வரப்பட்டனா். இதில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக குவைத்தில் இருந்து சனிக்கிழமை இயக்கப்பட்ட 2-வது சிறப்பு விமானத்தில் 103 போ் அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருச்சியில் இருந்து குவைத் சென்ற சிறப்பு விமானத்தில் 6.3 டன் காய்கனிகள் அனுப்பி வைக்கப்பட்டன. குவைத்திலிருந்து 3-வது சிறப்பு விமானம் திங்கள்கிழமை இயக்கப்படவுள்ளது.

இதுபோலவே அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் 11ம் தேதி விமானங்கள் புறப்படுவதாகவும், அதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.