புதிய நாடாளுமன்றம் வளாகம்; சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகள் பரிசீலினை..!

New Parliament complex may seat 1,350 members

மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று முக்கிய பகுதிகளாக நாடாளுமன்றம் பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், இட நெருக்கடி பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இதனால், புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதில் 1350 உறுப்பினர்கள் அமரும் வகையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி. எனப்படும் நிறுவனம் முக்கோண வடிவிலான கட்டட மாதிரியை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய கட்டடத்தில் 900 மக்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தின் போது 1350 உறுப்பினர்கள் அமரும் வகையிலும் நாடாளுமன்ற மைய மண்டபம் வடிவமைக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சவுத் பிளாக்கின் பின்புறம் பிரதமர் இல்லமும், நார்த் பிளாக் பின்புறம் குடியரசு துணைத்தலைவர் இல்லமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முதல் 2 வரிசைகளில் அமரும் எம்பிக்களுக்கு மட்டுமே மேஜை வசதி உள்ள நிலையில், புதிய கட்டடத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேஜை வசதி கிடைக்கும் என்றும் கட்டட வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக சிங்கப்பூர், கியூபா, எகிப்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டடத்திற்கான பணிகளை 2022-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.