உலகெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது. இந்தியாவிலும் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அதனால் வைரஸ் பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறி தென்படுபவர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ராஜா அப்பாச்சி, ‘டூ-விசில்’ (DoWhistle) என்ற செயலியை ஒரே நாளில் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை மையங்கள் குறித்த தகவலை உலகம் முழுவதிலும் உள்ள பரிசோதனை மையங்கள் பகிர்ந்துகொள்வதற்காக ‘DoWhistle.com’ என்ற வலைதளத்தை உருவாக்கி உள்ளோம். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ‘டூ-விசில்’ என்ற செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களை கண்டறியலாம். பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மையங்களை தொடர்பு கொண்டு மருத்துவ சேவைகளை சீக்கிரமாக பெறலாம். இதன் அடிப்படை தத்துவம் சேவை, தேவை என்பதாகும். இது பொது மக்களையும், அருகில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையங்களையும் இணைக்கும் திறன் கொண்டது.
இந்த தளமானது பொது மக்கள், அரசாங்கம் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து தனக்கு என்ன வேண்டும் அல்லது தன்னிடம் என்ன உள்ளது என்ற விவரங்களை தமது தற்போதைய இருப்பிடத்துடன் நேரடியாக பதிவு செய்வதால் தேடலின் போது நமக்கு கிடைக்கும் தகவல்கள் தற்போதைய துல்லியமான உண்மையான விவரங்கள் கிடைக்க வழிசெய்கிறது.
இதை வடிவமைக்கும் பணியை ஒரே நாளில் செய்துள்ளோம். இந்த வலைதளத்தை மக்கள் தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.” என்று ராஜா அப்பாச்சி கூறினார்.