கொள்ளையர்களை செருப்பால் அடித்து துரத்திய வயதான தம்பதிக்கு விருது! அமிதாப், ஹர்பஜன் பாராட்டு!

கையில் அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை துணிச்சலாக காலணிகளையும், நாற்காலிகளையும் கொண்டே விரட்டியடித்த நெல்லை வயதான தம்பதியை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

நெல்லை கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல் (68), மனைவி செந்தாமரை (65). சமீபத்தில், சண்முகவேல் தனது வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த போது, அங்கு கையில் அரிவாளுடன் வந்த இரு கொள்ளையர்கள், சண்முகவேல் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்க, அதைப் பார்த்து வெளியே வந்த செந்தாமரை கொள்ளையர்களை நோக்கி கைகளில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கினார்.

இந்த இடைவெளியில், சண்முகவேலும், நாற்காலி கொண்டு கொள்ளையர்களை தாக்க, ஒருக் கட்டத்தில் கொள்ளையன் ஒருவன், செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டான். அதன்பிறகும் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்ட, மனம் தளராத வயதான தம்பதி அவர்களை விடாமல் தாக்கினர். அதற்கும் மேல் அங்கிருப்பது ஆபத்து என்று, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினார். கொள்ளையர்களுடன் துணிச்சலுடன் போராடியபோது, அரிவாள் வெட்டில் செந்தாமரையின் கையில் காயம் ஏற்பட்டது.

இந்த வீடியோ தமிழகம் தொடங்கி இந்தியா முழுவதும் வைரலானது. தேசிய ஊடகங்களும், வயதான தம்பதியின் இந்த துணிச்சலான முயற்சியை சிலாகித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இவர்களைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ப்ராவோ!!!!’ (துணிச்சல் மிக்க செயல்) என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

அதுபோல், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வழக்கம் போல் தனது பாணியில் தமிழில் பன்ச் வசனங்களுடன் ட்வீட் செய்து பாராட்டியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், “திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும். என்ன வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ர மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்ட பார்வை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று(ஆக.15) இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

அதில், நெல்லையில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் – செந்தாமரை தம்பதியினருக்கு, அதீத துணிவிற்கான சிறப்பு விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.