சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறப்புக்கொடியுடன் நடைபெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா..!

Nagoor festival

தமிழகத்தில் புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்று நாகூர் தர்கா. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி மற்றும் சந்தனக்கூடு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த வருடம் சந்தனக்கூடு விழா பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியை காண சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தனர்.

கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரில் இருந்து, நாகைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் முதுபக்கு எனும் இந்த சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணிசட்டி போன்ற ரதங்கள் ஊர்வலமாக நாகையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தன.

அதனை தொடர்ந்து, வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. அப்போது வண்ணமயமான வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.

மேலும், இந்த விழா கொடியேற்றத்தையொட்டி ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.