புதுச்சேரி முத்தமிழ் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் பங்கேற்பு..!

புதுச்சேரியில் முத்தமிழ் முகாமில் உரையரங்கம் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் பங்கேற்றனர்.

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் சார்பில், முத்தமிழ் முகாமிற்கு புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி வரை நடக்க உள்ள இந்த முகாமில், சிங்கப்பூரை சேர்ந்த 15 தமிழாசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஓட்டல் ஆனந்தா இன்னில் துவங்கிய இந்த முகாமை, பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடு நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். முகாமின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.

காலையில், சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கு, வகுப்பறைக்கான எளிய யோகா பயிற்சிகள் கற்று தரப்பட்டது. பயிற்சி வகுப்பை, யோகா பயிற்றுநர் ஞானவேலு நடத்தினார். தொடர்ந்து நடந்த உரையரங்கம் நிகழ்ச்சியில், ‘தமிழ்மொழி கற்றல் – கற்பித்தலில் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பதிவாளர் முகிலை ராஜபாண்டியன் உரையாற்றினார்.

‘இருமொழிக் கல்வி – புதுச்சேரி அனுபவம்’ என்ற தலைப்பில் புதுச்சேரி அரசு சட்டத் துறையின் முதன்மை மொழிப்பெயர்ப்பாளர் சுந்தர முருகன் பேசினார். மாலையில், சிங்கப்பூர் தமிழாசிரியர் குழுவினர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்று, பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முகாம் ஒருங்கிணைப்பாளரும், பி.எஸ். பாளையத்தில் உள்ள பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வருமான பூபதி செய்திருந்தார்.