கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க இயலாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் சிக்கியுள்ள 350 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கி எடுக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் என்பவர் சார்பாக வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து ஆகிவிடும் எனவும், ஊரடங்கு நேரத்தில் வெளிநாட்டில் தங்கி உள்ளவர்களை இந்தியா கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், சிறப்பு விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை சொந்த நாடு திரும்ப மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ளது போல, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.