கிருஷ்ணகிரி கத்திரிக்காய் இனி சிங்கப்பூரில்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டையில் நிலவும் குளுமையான காலநிலையால், விவசாயிகள், பசுமைக்குடில் அமைத்து, கேரட், பீட்ருட், கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளையும், ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட மலர்களையும் சாகுபடி செய்கின்றனர். இவை, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. அதேபோல், கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை பாசனத்தில் தற்போது, கத்தரிக்காய், குண்டுமல்லி போன்றவற்றை, விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அவதானப்பட்டியில் சாகுபடி செய்யப்படும் கத்தரிக்காய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நெல் விளைந்த பூமியில், போதிய விளைச்சலும், வருமானமும் இல்லாததால், விவசாயிகள் பலர் பணப்பயிருக்கு மாறி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், கத்தரிக்காய் பயிரிடப்பட்டு, 45 நாட்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய் தரமாக உள்ளதால், சிங்கப்பூரில் நல்ல வரவேற்பு உள்ளது. தினமும், 1 டன் கத்தரிக்காய் அறுவடை செய்து, பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விமானத்தில் சிங்கப்பூர் செல்கிறது.

அங்குள்ள சந்தை விலையை பொறுத்து, 1 கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இடைத்தரகர்களை நம்பி விவசாயம் செய்வதில், பல்வேறு சிக்கல் உள்ளதால், காய்கறிகள் ஏற்றுமதியில், விவசாயிகள் நேரடியாக பயனடையும் வகையில், கிருஷ்ணகிரியில் ஏற்றுமதி மண்டலம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

Source: Dhinamalar