கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை; கொச்சி விமான நிலையம் மூடல்: 23 பேர் பலி, 22 ஆயிரம் பேர் இடமாற்றம்!

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்த்துவரும் கனமழைக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் பெய்த மழையால் விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்ததது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மழையால் வயநாடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகம், கேரளா, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்கள், ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

கேரளாவில் கடந்த இரு நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் இந்த மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு கடற்கரை வரை கடற்பகுதி மிகுந்த கொந்தளிப்பாக இருக்கும். 3.2 மீட்டர் முதல் 3.7 மீட்டர் உயரம் வரை அலை சனிக்கிழமை வரை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெரியாறு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொச்சி விமானநிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால், இன்று இரவுவரை விமானப் போக்குவரத்து இயக்கம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின் ஞாயிற்றுக்கிழமை 3 மணி வரை விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கொச்சி விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டத்தில் வட்டக்காரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேரைக் காணவில்லை என்று மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் வந்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் ஆற்று நீரும், மழை வெள்ளமும் சாலையில் சென்றதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடவானா நகரில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கனமழையால், மராரிக்குளா-ஆழப்புழா இடையிலான தண்டவாளம் மழைநீரில் மூழ்கிவிட்டதால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் மாவேலி எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, தான்பாட் எக்ஸ்பிரஸ் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகியவே பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன.

கேரளாவில் மழைக்கு கடந்த இரு நாட்களில் 12 பேர் பலியானதாகவும், அதில் வடக்கு கேரளாவில் மட்டும் 8 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மழைக்கு 23 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.