சர்வதேச விமான சேவை இன்று முதல் சென்னையில் தொடங்குகிறது..!

இந்தியாவில் ஊரடங்கு தளர்வுபடுத்தியதை அடுத்து, இன்று(26 மே) முதல் சென்னையில் விமான சேவை தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாள்தோறும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. நாள்தோறும் 25 உள்நாட்டு விமானங்கள் வெளி மாநிலங்களிலிருந்து இயக்க தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னையிலிருந்து சர்வதேச விமானங்கள் இன்று முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து மொத்தம் 40 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டிற்கு சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதற்கிடையில் முதல் விமானமாக ஏர் இந்தியா காலை 5.05 மணிக்கு அந்தமான் செல்கிறது. இவையெல்லாம் சிறப்பு விமானங்கள் இல்லை எனவும், வழக்கமான பயணிகள் சேவை தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்துக்கு செல்வதற்கு வசதியாக இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து வந்து ஊரடங்கால் சென்னையில் சிக்கியவர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்கு செல்ல இந்த சர்வதேச விமான சேவையை வாய்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதும், இந்த நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.