இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தனது சர்வதேச விமானங்களை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைப்பதாகக் பட்ஜெட் கேரியர் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது. முன்னரே ஏர் இந்தியா நிறுவனம், தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் சர்வதேச நடவடிக்கைகள் ஏப்ரல் 30, வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உங்கள் பணம் கிரெடிட் ஷெல் வடிவத்தில் பாதுகாப்பானது, வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்” என்று இண்டிகோ நிறுவனம், கடந்த புதன்கிழமை ட்விட்டரில் பதிவுசெய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடையவிருக்கும் 21 நாள் ஊரடங்கை இந்தியா விதித்துள்ளது. இதன் விளைவாக, அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களும் இந்த காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்ற முழு நம்பிக்கையுடனும், விமான நடவடிக்கைகளுக்கான தடைகளை நாடு நீக்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புதன்கிழமை தெரிவித்தார்.
சரக்கு விமானங்கள், கடல் ஹெலிகாப்டர் செயல்பாடுகள், மருத்துவ வெளியேற்ற விமானங்கள் மற்றும் இந்திய விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ அனுமதித்த சிறப்பு விமானங்கள், இந்த ஊரடங்கின் போது இயக்க அனுமதிக்கப்படுகின்றன.