கொரோனா வைரஸ்: இந்தியாவில் முதல் பலி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Corona virus, covid 19, india first death

கர்நாடக மாநிலம் கல்பர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான முதல் இந்தியர் இவர்தான்.

கடந்த பிப்ரவரி 29ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து உம்ரா பயணத்தை முடித்து விட்டு ஹைதராபாத் திரும்பிய அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது எந்த அறிகுறியும் தெரியவில்லை. மார்ச் 5ம் தேதி அவரை கல்பர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருக்கு ஆஸ்த்மா பிரச்சனையும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். இந்த நிலையில் நேற்று இரவு 10. 30 மணியளவில் அந்த முதியவர் மரணமடைந்தார். தொடர்ந்து, அவரது குடும்பம் முழுமையும் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு தமது டுவிட்டர் பக்கத்தில், கோவிட்-19 வைரஸ் சந்தேக அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 76 வயது நபர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் தனது செய்திக் குறிப்பின் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.