வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் “வந்தே பாரத்” மிஷன் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக கடந்த வியாழக்கிழமை கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அபுதாபியிருந்து வந்தடைந்தது. இரண்டாவதுதாக கோழிக்கோடு விமான நிலையத்தில் மற்றொரு விமானம் தரையிறங்கியது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்திய அரசு கடந்த வியாழக்கிழமை “வந்தே பாரத்” எனும் திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஒரு வாரத்தில் 64 விமானங்கள், மூன்று கடற்படைக் கப்பல்களில் சிங்கப்பூர், மலேசியா, குவைத், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 15,000 இந்தியர்கள் மீட்கப்பட உள்ளனர்.
இதன் முதல் கட்டமாக கடந்த வியாழக்கிழமை அபுதாபியிலிருந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு 4 குழந்தைகள் உட்பட 177 பயணிகளுடன் ஒரு விமானம் வந்தடைந்தது. இரண்டாவதாக கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து மற்றுமொரு விமானம் 177 பயணிகளுடன் வந்தடைந்தது. இந்த பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து டெல்லிக்கு 234 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை வந்தடைந்தது. அதேபோல் இத்திட்டத்தின் கீழ் வங்கதேசத்திலிருந்து 186 இந்திய மாணவர்கள் மீட்கப்பட உள்ளனர்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் அடுத்த வாரத்தில் கேரளாவில் 15 விமானங்களும், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா 11 விமானங்களும், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 7 விமானங்களும் தரையிறங்க உள்ளன.
மீதமுள்ள விமானங்கள் பஞ்சாப், குஜராத், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் வந்தடைய உள்ளன. இந்த இக்கட்டடான காலகட்டத்தில் பல நாள் போராட்டத்திற்குப் பிறகு தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்புவது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.