தாய் நாடு திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்..! வந்தே பாரத் திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிப்பா..?

வெளிநாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வரும் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க சர்வேதச நாடுகள் விமான சேவைகளை ரத்து செய்ததால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து வரும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தில் தமிழர்கள் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, அக்டோபர் முதல் மார்ச் வரையில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிக்காக வந்த பல நபர்கள், பணி முடிந்ததற்கு பிறகும் அல்லது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டதற்கு பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனர்.

தொடர்ந்து, வளைகுடா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் தற்காலிக விசாக்களையே பயன்படுத்தி வருகின்றனர். விசா காலம் முடிந்தவர்கள், சுற்றுலா விசாவில் சென்ற கர்ப்பிணிகள், முதியவர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழர்களை தாயகம் அழைத்து வர தனியார் விமான நிறுவனங்கள் முன்வந்த போதும், மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. வேலை இழந்து மூன்று மாதங்களாக உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளவர்களை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.