வேலையின்றி ஊர் திரும்பிய இந்திய விவசாயிக்கு அடித்த அதிஸ்டம் – பிக் டிக்கெட் மூலம் 28 கோடியை பரிசாக தட்டிச் சென்றார்.!

வேலையில்லாமல் துபாயில் இருந்து ஹைதராபாத் திரும்பிய விவசாயிக்கு அபுதாபியில் லாட்டரி டிக்கெட் (டிக்கெட் எண்: 223805) மூலம் 28 கோடி பரிசு விழுந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் விலாஸ் ரிக்காலா, மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் வேலை தேடி துபாய் சென்று இருந்தார். அங்கு அலைந்தும் திரிந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. பிறகு துபாயை விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்ப வருவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

ஊருக்கு திரும்புவதற்கு முன்னால் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை வாங்க வேண்டும், என்று அவருக்கு ஒரு ஆசை இருந்தது. உடனே மனைவிக்கு தகவல் சொல்லி அவரிடம் இருந்து ரூபாய் 20,000 வாங்கி நண்பரோடு சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கினார். பிறகு துபாயில் இருந்து புறப்பட்டு தன்னுடைய சொந்த ஊரை வந்தடைந்தார்.

இந்நிலையில், லாட்டரியில் சுமார் 15 மில்லியன் திரகம் பரிசாக விழுந்தது குறித்த தகவல் அவருக்கு கூறப்பட்டது. தகவலை கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரிக்காலா இதை ஆரம்பத்தில் நம்பவில்லை. அவர் வென்றது இந்திய மதிப்பில் சுமார் 28 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.

இதைப்பற்றி ரிக்காலா கூறுகையில், நான் ஏற்கனவே துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து இருக்கிறேன். அச்சமயம் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவது உண்டு. இப்போது என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் மனைவியிடம் பணம் கேட்டு அதை அபுதாபியில் வேலை பார்க்கும் நண்பன் ரவி இடம் கொடுத்து, இந்த லாட்டரி டிக்கெட் வாங்கச் சொன்னேன். அதற்கு இவ்வளவு மதிப்புள்ள பரிசு விழுந்தது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதற்கு முழு காரணம் என்னுடைய மனைவி பத்மா தான் என்று கூறினார்.