உலக சுகாதார அமைப்பு (WHO) வின், புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் முக்கிய துறைக்கு தலைமை விஞ்ஞானியாக சென்னையை சேர்ந்த டாக்டர் சௌமியா சாமிநாதன் பொறுப்பேற்று உள்ளார். இவருக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சௌமியா சாமிநாதன் ஏற்கனவே WHO- வின் திட்ட வரைவுக்குழுவில் துணை இயக்குநர் ஜெனரலாக இருந்தார். இந்நிலையில், ஒரு தனித்துவம் வாய்ந்த “சீர்திருத்த துறைக்கு” தலைமை பொறுப்பை வகிக்கும் வாய்ப்பை பெறும் முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை தட்டி சென்று உள்ளார். (WHO) வின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுக்கு (Tedros Adhanom Ghebreyesus) உதவும் இயக்குனர்கள் குழுவில் இருந்த 3 முக்கிய துணை இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டாக்டர் சௌமியா சாமிநாதன் கூறுகையில், “WHO வின் புதிய சீர்திருத்த துறை உருவாக்கியதன் முக்கிய நோக்கமே, உலக சுகாதார அமைப்பின் முக்கிய நெறிமுறைகளை மேம்படுத்தவும், பொது சுகாதாரம் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், உலக நாடுகளில் மருத்துவ ஆராய்ச்சி முறைகளை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில் நுட்பங்களுக்கான அணுகலை துரிதப்படுத்துதல் மற்றும் பல முக்கிய திட்டங்கள் உள்ளன. இத்தைகைய சிறப்பான பணிகளை செய்ய தனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு” என குறிப்பிட்டு உள்ளார்.
டாக்டர் சௌமியா சாமிநாதன், 1959 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என்றழைக்கப்படும் சாமிநாதன் மற்றும் இந்திய கல்வியாளர் மீனா சாமிநாதன் அவர்களுக்கும் மகளாக பிறந்தார். ஆயுதப்படைக் கல்லூரியில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்த சௌமியா, பின்னர் எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் (AIIMS )எம்.டி.யும் ,தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் paediatric pulmonology (குழந்தைகள் நலம்) படிப்பையும் முடித்து உள்ளார்.
இது தவிர காசநோய் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல் திட்டங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அக்டோபர் 2017-ல், WHO வில் துணை இயக்குனராக (DDGP) சேர்ந்து, இன்று ஒரு தனித்துவம் வாய்ந்த சீர்திருத்த துறைக்கு தலைமை பொறுப்பில் அமர்ந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்து உள்ளார்.
இது குறித்து WHO இயக்குனர் கெப்ரேயஸ் தெரிவிக்கும் போது, “இந்த துறைக்கான பணியில்,கடந்த 18 மாதங்களாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தோம். இந்த துறை மூலம் செய்ய வேண்டிய மிக முக்கிய பணிகள் என்ன? செயல்திட்டங்கள் என்ன? எப்படி கையாள வேண்டும்? உலக நாடுகளில் மருத்துவ ஆராய்ச்சி திறன் அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன..? என்பது குறித்து செயல்திட்டம் வகுத்து உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.