இந்தியாவில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி உற்பத்தி தொடங்கியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணித் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin) ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமும் (Serum Institute Of India), கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும் (Bharat Biotech) உற்பத்திச் செய்து வருகின்றனர். இந்த இரு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்கள் ஆகும்.

 

இந்நிறுவனங்கள் உற்பத்திச் செய்யும் தடுப்பூசிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஆர்டர்கள் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்நிறுவனங்களின் உற்பத்தித் திறன் குறைவு காரணமாக, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க இரு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், மேலும் சில வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ (Sputnik V) தடுப்பூசியின், அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இம்மாதம் இரண்டு கட்டமாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட இந்த ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளின் விலை, ஐந்து சதவீத ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூபாய் 995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான அனுமதியை டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரிஸ் (Dr.Reddy’s Laboratories) பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விற்பனைக்கு வரும்போது, இதன் விலை மேலும் குறையும் என டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரிஸ் கூறியிருந்தது.

 

இந்த நிலையில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான பனசியா பயோடெக் (Panacea Biotec), ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (Russian Direct Investment Fund- RDIF) வெளியிட்டுள்ளது.

 

ஆண்டுக்கு சுமார் 10 கோடி ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகள் இந்நிறுவனத்தில் உற்பத்தியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி உற்பத்திக் காரணமாக வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விரைவாகச் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.