இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவை இன்று முதல் தொடக்கம்!

Air India
Photo: Air India

கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் நாடுகளில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்திருந்தனர். அந்த வகையில், கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் 23- ஆம் தேதி அன்று இந்தியாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து விமான போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதோடு, பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ரத்துச் செய்யப்பட்டன. இந்த நாட்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கினர்.

பொதுமுடக்கம் எட்டு மாதங்கள் வரை நீடித்ததைத் தொடர்ந்து, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் இந்திய அரசு அனுமதி அளித்திருந்தது. எனினும், குறைந்த அளவிலேயே விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கின்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, அபுதாபி, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை ‘வந்தே பாரத் திட்டம்’ மூலம் சிறப்பு விமானங்களை இயக்கி, அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்தது இந்திய அரசு. அதேபோல், கடல் மார்க்கமாகவும், இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டன.

இந்திய அரசின் தொடர் நடவடிக்கையால், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் இந்தியாவில் முடுக்கிவிடப்பட்டனர். மேலும், கொரோனா கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்ட காரணத்தால், நோய் பரவல் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்தைத் தொடங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச விமான போக்குவரத்துத் தொடங்குவதை ஒத்தி வைத்திருந்தது.

தற்போது, கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலையின் பரவல் குறைந்து வருவதாலும், கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாலும், நடப்பாண்டில் மார்ச் 27- ஆம் தேதி முதல் இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (27/03/2022) முதல் இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவை தொடங்கியுள்ளது. இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் விமானத்துறை பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், இந்திய சுற்றுலாத்துறை பழைய நிலைக்கு படிப்படியாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.