“ஒலிம்பிக்கில் கபடி இடம் பெறுவதை ஆசிய நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இதுவே நமது லட்சியம்” என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான கபடி தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் இடம் பெறுகிறது. அதில் இந்திய ஆண்கள் அணி 7 தங்கம், பெண்கள் அணி 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடமேறுவது இல்லை.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு கூறியிருப்பதாவது, “கபடி போட்டி ஆசிய விளையாட்டுகளில் தொடர்ந்து இடம் பெறுகிறது, ஆனால் ஒலிம்பிக்கில் இடம் பெறுவதில்லை. அதனால், இந்தியா மட்டுமல்லாமல் மற்ற ஆசிய நாடுகளும் ஒன்றிணைந்து ஒலிம்பிக்கில் கபடி போட்டியை நடத்த வலியுறுத்த வேண்டும். இதுவே நமது லட்சியம்.
தற்போது நடக்கும் கொரோனா போரில் நாம் எப்படியும் வெல்வோம். இந்த கொரோனா முடிந்த பிறகு மைதானத்தில் இறங்கி பயிற்சியில் ஈடுபட்டு விளையாட துவங்குவோம். அதுவரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்மை நாமே அப்டேட் செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.